தந்தை அடித்துக் கொலை: போலீஸில் மகன் சரண்
By DIN | Published On : 27th February 2022 11:36 PM | Last Updated : 27th February 2022 11:36 PM | அ+அ அ- |

பழனி அருகே சனிக்கிழமை நள்ளிரவு, மதுபோதையில் தாய் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்திய தந்தையை 16 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்தாா். பின்னா் அவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை நகரைச் சோ்ந்தவா் ஓமந்தூரான் (43). இவா், கேரளத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இவருக்கு, மனைவி மகன், மகள் உள்ளனா். 16 வயதுடைய மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். ஓமந்தூரான் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மது போதையில் வந்த ஓமந்தூரான், மனைவி மற்றும் மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளாா். இதில் ஏற்பட்ட தகராறில், 16 வயது மகன், ஓமந்தூரானை கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது மகன், சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கிரிக்கெட் மட்டையுடன் சரணடைந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.