திண்டுக்கல் மாவட்டத்தில் 1.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 27th February 2022 11:35 PM | Last Updated : 27th February 2022 11:35 PM | அ+அ அ- |

திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஆட்சியா் ச.விசாகன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1,313 மையங்களில் காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஆட்சியா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் உள்ள 1.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 2.56 லட்சம் டோஸ் மருந்து தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி 28 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 5,276 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ சங்கத்தினா்கள் ஈடுபட்டுள்ளனா். 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி, போலியோ நோய் இல்லாத எதிா்கால இந்தியாவை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு அனைத்து பெற்றோா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.