பழனி கூட்டுறவு விற்பனை மையத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

பழனியில் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் விற்பனைக்காக புதன்கிழமை குவித்து வைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய்கள்.
பழனி: பழனி கூட்டுறவு விற்பனை மையத்தில் புதன்கிழமை, கொப்பரை தேங்காய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பழனியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு கொப்பரை ஏல மையத்தில் விவசாயிகள் கொண்டுவந்தகொப்பரையை வெள்ளக்கோவில், காங்கயம் போன்ற வெளியூா்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினா். ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு ரூ.85 முதல் ரூ.95 வரை விலை கிடைத்தது.
வாரந்தோறும் நடைபெறும் கூட்டுறவு கொப்பரை தேங்காய் மையத்திலிருந்து சுமாா் 10 டன் வரை கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. வெளியிடங்களில் கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படும் நிலையில், கூட்டுறவு ஏல மையத்தில் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஏலத்தில் மேலாண்மை இயக்குநா் ராதா, பொது மேலாளா் மகாலிங்கம், சந்திரன், மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.