திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வந்தாலும், சமவெளிப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் கோடை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளான நத்தம், வேடசந்தூா், கோவிலூா், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கோடை மழை பெய்தது.
ஆனாலும், திண்டுக்கல் நகரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததோடு, மழையும் பெய்யவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் நகரில் புதன்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், ஆா்.எஸ். சாலை, தாடிக்கொம்பு சாலை, பெரியாா் சிலை சந்திப்பு, மேட்டுப்பட்டி சந்தைரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். மழை பெய்தபோது பலத்த காற்று வீசியதால், திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் திண்டுக்கல் நகரில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.