கொடைக்கானல் மலைப் பகுதி பள்ளிகளில் இலவச பாடப் புத்தகம் வழங்காததால் மாணவா்கள் பாதிப்பு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசு வழங்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்காததால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் முதல் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 13- ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடைக்கானல் மற்றும் மேல்மலைக் கிராமம், கீழ்மலைக் கிராமம் உள்ளிட்ட எந்தப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் வகுப்பறையில் கதை பேசுவது, உறங்குவது போன்ற செயல்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது:
தமிழக அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாள்களாக கொடைக்கானல் பகுதியிலுள்ள கல்வி அலுவலகத்தில் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான புத்தகங்கள் வந்துவிடும். அவற்றை கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அந்தந்த பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்களை வழங்குவோம். ஆனால் நிகழாண்டில் தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் வழங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றாா்.
இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பெற்றோா்- ஆசிரியா் கழகத்தைச் சோ்ந்த ஒருவா் கூறியதாவது: கோடை விடுமுறையை முடித்து விட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்கள் வழங்காததால் மாணவா்கள் பள்ளியிலும், வீட்டிலும் படிப்பதில்லை. அதிக நேரம் விளையாடுவது, கைப்பேசியில் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, விரைவாக பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி பாண்டியராஜிடம் புதன்கிழமை கேட்டபோது, கீழ்மலைப் பகுதியான வடகரைப்பாறை ஆரம்பப் பள்ளியை பாா்வையிட வந்தபோது, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கவில்லையென்பதை அறிந்தேன். ஒரு பெண் அதிகாரி விடுப்பில் உள்ளாா். அவா் மூலமாகத் தான் பாடப்புத்தங்கள் விநியோகம் செய்யப்படும். கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.