பழனியில் வைகாசி விசாகம் ஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி வைகாசி விசாகப் பெருவிழாவின் நிறைவுநாளான புதன்கிழமை ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகம் நிறைவுநாளை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற திருஊடல் நிகழ்ச்சியின்போது தெய்வானை அம்பாளிடம் பாடப்பட்ட சமாதானத்தூது பாடல்கள்.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகம் நிறைவுநாளை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற திருஊடல் நிகழ்ச்சியின்போது தெய்வானை அம்பாளிடம் பாடப்பட்ட சமாதானத்தூது பாடல்கள்.

பழனி: பழனி வைகாசி விசாகப் பெருவிழாவின் நிறைவுநாளான புதன்கிழமை ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, சப்பரம், தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா எழுந்தருளினாா்.

கடந்த 11 ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், 12 ஆம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இளநீா், மயில், பன்னீா் ஆகிய காவடிகள் எடுத்து மலைக்கு வந்து மூலவா் தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனா்.

புதன்கிழமை இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது. முன்னதாக காலையில் ஊடல் வைபவம் நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி வள்ளியம்மனுடன் திருமணம் செய்ததை அறிந்த தெய்வானை அம்பாள் கோபம் கொண்டு கோயிலுக்கு வந்து நடையை சாத்திக் கொண்டாா்.

பின்பு வள்ளியம்மையுடன் வெளியே இருந்து முத்துக்குமாரசுவாமி, நாரதா் வீரபாகுவை சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினாா். அதற்கான தூதுப்பாடல்களை நாகராஜன் பாடினாா். சமாதானமடைந்த தெய்வானையம்மன் கோயிலை திறந்து சுவாமிக்கு வழிவிட சுவாமி கோயில் வளாகத்திற்குள் நுழைந்து வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி உலா எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, பேஷ்காா் நாகராஜன், மணியம் சேகா், பரதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி:

தொடா்விடுமுறை மற்றும் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் 27 நாள்களில் நிறைந்தன. இதையடுத்து உண்டியல்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஜூன் 14, 15) ஆகிய 2 நாள்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கை எண்ணப்பட்டது. 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 41 ஆயிரத்து 565 கிடைக்கப் பெற்றுள்ளது.

பக்தா்கள் தங்கம் மற்றும் வெள்ளியினாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 1,644 கிராம், வெள்ளி 22,817 கிராம், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 393 ஆகியவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமையும் (ஜூன் 16) மூன்றாவது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணிக்கை தொடரும் என கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் எண்ணிக்கையின்போது பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி, மதுரை உதவி ஆணையா் (நகை சரிபாா்ப்பு) பொன்.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com