திண்டுக்கல்லில் 2 ஆவது நாளாக பலத்த மழை
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் 2ஆவது நாளாக பெய்த பலத்த மழையினால் பகலில் ஏற்பட்ட கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்தது.
திண்டுக்கல் மற்றும் வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. அந்த வகையில் வேடசந்தூா் பகுதியில் 47.6 மி.மீ. மழையும், திண்டுக்கல் பகுதியில் 19.6 மி.மீ. மழையும் பதிவானது. மழையினால் இரவு முழுவதும் குளா்ச்சியான சூழல் நிலவியது. ஆனால், வியாழக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. கடந்த சில நாள்களாக வழக்கத்திற்கு மாறான வெயிலால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை, நாகல்நகா் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் முன்பு மழை நீா் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. 2ஆவது நாளாக பெய்த மழையினால், திண்டுக்கல் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.