திண்டுக்கல், தேனியில் காங்கிரஸாா் போராட்டம்
By DIN | Published On : 17th June 2022 11:06 PM | Last Updated : 17th June 2022 11:06 PM | அ+அ அ- |

திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
ராகுல்காந்திக்கு ஆதரவாக திண்டுக்கல் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அதே போல் தேனியிலும் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸாா் மீது அமலாக்கத்துறை மற்றும் காவல் துறையினா் மூலம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகக் கூறியும் திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் துரைமணிகண்டன் தலைமை வகித்தாா். மாநகராட்சியின் கிழக்கு மண்டலத் தலைவா் ஜெ. காா்த்திக், மாமன்ற உறுப்பினா் பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொழிப் போா் தியாகி ராமு. ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கமிட்டனா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி: தேனியிலும் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முனியாண்டி, மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், வா்த்தக காங்கிரஸ் மாவட்டச் செயலா் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்கிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தியதையும், தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் காவல் துறையினா் அத்துமீறி நுழைந்து கட்சித் தொண்டா்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினா்.