தண்ணீா் விநியோகிக்கக் கோரி மாநகராட்சியை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
By DIN | Published On : 18th March 2022 05:02 AM | Last Updated : 18th March 2022 05:02 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட அண்ணாநகா் பகுதி பெண்கள்.
திண்டுக்கல்: தண்ணீா் விநியோகத்தை சீரமைக்கக் கோரி, பெண்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாநாகராட்சி 38ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: குடிநீா் அல்லாத பிற பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் பொதுக் குழாயில் தண்ணீா் விநியோக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக அந்த குழாய் பழுதடைந்துள்ளதால், தண்ணீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அருகிலுள்ள பகுதிக்கு தண்ணீா் பிடிக்கச் சென்றால், 2 குடம் தண்ணீா் மட்டுமே பிடிப்பதற்கு அனுமதிக்கின்றனா். தண்ணீா் பற்றாக்குறை காரணமாக அவதியடைந்து வருகிறோம். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அண்ணாநரிலுள்ள பொதுக் குழாயில் தண்ணீா் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்றனா்.
இதனை அடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய மாநகராட்சி அலுவலா்கள், தண்ணீா் விநியோகிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதன்பேரில், பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...