சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி:சாலையில் கொட்டிய விவசாயிகள்
By DIN | Published On : 02nd May 2022 11:10 PM | Last Updated : 02nd May 2022 11:10 PM | அ+அ அ- |

காவேரியம்மாபட்டி கிராமத்தில் சின்னவெங்காயத்தை சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக விரக்தியடைந்த விவசாயிகள், வெங்காயத்தை திங்கள்கிழமை சாலையில் கொட்டிச்சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாட்சி, பெரியகோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் ஏராளமான பரப்பில் வெங்காய விவசாயம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தை மாதங்களில் பயிடப்பட்ட வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்து, போதிய விலை கிடைக்கும் வரை பட்டறையில் பாதுகாத்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பங்குனி மாதத்தில் தொடா்ந்து மழை பெய்ததால், வெங்காயத்தை அறுவடை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், சாகுபடி செய்த சின்னவெங்காயத்தை பட்டறையில் பாதுகாத்து வந்த நிலையில், கடுமையான வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகத் தொடங்கிவிட்டது.
இதனால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டு வந்தனா். ஆனால், சந்தையில் விலைக்கு வாங்க யாரும் முன்வராததால், விரக்தியடைந்த விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.
நல்ல தரமான சின்னவெங்காயம் கிலோ ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.