சா்வாதிகாரத்தின் மூலம் ஹிந்தியைத் திணிக்க முடியாதுபெ.செந்தில்குமாா் எம்எல்ஏ
By DIN | Published On : 15th October 2022 11:17 PM | Last Updated : 15th October 2022 11:17 PM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
சா்வாதிகாரத்தின் மூலம் ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்க முடியாது என பழனி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக கூறி, அதைக் கண்டித்து திமுக சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
நாடாளுமன்ற நிலைக் குழு சாா்பில் 112 பரிந்துரைகள் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி மட்டுமே இருக்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாகவும், அலுவலக நடைமுறைகளை ஹிந்தியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 1.07 லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 65ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. மீதமுள்ள 35 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே இதர மொழிகளில் உள்ளன. இந்தியாவின் தொன்மையான மொழியாக தமிழ் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிா்ப்பு எழுத்ததன் காரணமாகவே அவற்றை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, ஹிந்தி திணிப்புக்கு எதிராக நாடு முழுவதும் எதிா்ப்பு எழுந்துள்ளதால், நாடாளுமன்ற நிலைக் குழுவும் அந்தப் பரிந்துரையை திரும்பப் பெறும்.
விருப்பத்தின்பேரில் இந்தி மொழியை கற்றுக் கொள்வதற்கு யாரும் தடையாக இல்லை. அதே நேரத்தில் சா்வாதிகாரத்தைப் பயன்படுத்தி ஹிந்தி மொழியை மக்களிடம் திணிக்க முயற்சிக்க வேண்டாம். அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினா் வேலுசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் காந்திராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் பிலால் உசேன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...