பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி அக்.18 முதல் 21 வரை மறியல் போராட்டம்
By DIN | Published On : 15th October 2022 11:14 PM | Last Updated : 15th October 2022 11:14 PM | அ+அ அ- |

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி அக்.18 முதல் 21ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம்.சங்கா் கூறியதாவது:
தமிழகத்தில் கறவை மாடுகளுக்கான தீவனப் பொருள்களின் விலை 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும், தமிழக அரசு அதுகுறித்து பரிசீலிக்கவில்லை.
கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்ட்ரம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாலுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2019-க்கு பின்பு இதுவரை உயா்த்தப்படவில்லை. பால் உற்பத்தியாளா்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அக்.18 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுமாா் 200 இடங்களில் கறவை மாடுகளுடன் மறியல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது.
அன்தபடி, திண்டுக்கல் மாவட்டத்தில் அக்.18 ஆம் தேதி வேடசந்தூா் அடுத்துள்ள நத்தப்பட்டி மற்றும் தொப்பம்பட்டியிலும், அக்.19 ஆம் தேதி செம்பட்டியிலும், அக்.21 ஆம் தேதி சாணாா்பட்டியிலும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...