திண்டுக்கல்லில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் தப்பியோட்டம்
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் கடத்திச் செல்ல வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாா், தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனா்.
திண்டுக்கல்- தாடிக்கொம்பு சாலையிலுள்ள அரசுக் கல்லூரி அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்படி, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் ஆய்வாளா் ஆா். கீதா, சாா்பு- ஆய்வாளா் பி. காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அந்த கல்லூரிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் சோதனை மேற்கொண்டனா்.
அதில், பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகள், வேனில் ஏற்றுவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தலா 50 கிலோ ரேஷன் அரிசி கொண்ட 22 மூட்டைகள் இருந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள அம்மாகுளத்துப்பட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் கெளதம் (23) ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், கெளதம் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...