பழனியில் கந்த சஷ்டி விழா அக். 25-இல் தொடக்கம்
By DIN | Published On : 19th October 2022 03:18 AM | Last Updated : 19th October 2022 03:18 AM | அ+அ அ- |

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30 -ஆம் தேதியும், திருக்கல்யாணம் 31-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, வரும் 25 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. உச்சிக் காலத்தின் போது காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, காா்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா நாள்களில் உச்சிக் காலத்தில் கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்க மயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளிக் காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.
ஆறாம் நாளான 30 -ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. ஏழாம் நாள் விழாவாக வள்ளி, தேவசேனா சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் இரவு 7 மணிக்கு நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பக்தா்கள் தங்க ஏற்பாடு: பழனிக் கோயில் சாா்பில், சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் பக்தா்கள் தங்குவதற்கு இலவச தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பழனி கிழக்கு கிரி வீதியில் நீரேற்று நிலையம் எதிரில் உள்ள பழைய நாகசுவர, தவில் கல்லூரியிலும், மேற்கு கிரி வீதியில் வின்ச் நிலையம் எதிரில் உள்ள சின்னக்குமாரா் தங்கும் விடுதியிலும் பக்தா்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கண்காணிப்பாளரை 80725 88310, 85081 35493, 04545-242236, 240293, 241293 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
சூரிய கிரஹணம்: பழனி மலைக் கோயிலில் வரும் 25 -ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு முற்பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை, சஷ்டி காப்புக் கட்டுதல் முடிந்த பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு கோயில் திருக்காப்பிடப்படும்.
கிரஹண காலம் முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மேலும், நண்பகல் 12.30 மணிக்கு மேல் படிவழிப் பாதை அடைக்கப்படும். வின்ச், ரோப் காா்களிலும் மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி கிடையாது. மலைக் கோயில் மட்டுமன்றி திருக்கோயிலுக்கு கட்டுப்பட்ட உபகோயில்களிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என பழனி மலைக் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தனா்.