மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு பணிபுரிந்தோா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த தனி நபா்கள், நிறுவனங்கள் மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த தனி நபா்கள், நிறுவனங்களுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகிறது. டிச. 3-ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்டவுள்ளன.
மாற்றுத் திறனாளி சிறந்த பணியாளா், சுயதொழில் புரிவோருக்கு 10 விருதுகள், சிறந்த சமூகப் பணியாளருக்கு ஒரு விருது, மாற்றுத்திறனாளிக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ஒரு விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய நிறுவனத்துக்கு ஒரு விருது, ஆரம்பகால பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறந்த ஆசிரியா்கள் இருவருக்கு விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா், நடத்துனா்களுக்கு 2 விருதுகள், பொதுக்கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற கட்டடமைப்புகளை ஏற்படுத்தி உள்ள சிறந்த அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு 2 விருதுகள் வீதம் வழங்கப்படும். அனைத்து விருதுகளுக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2460099 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.