கொடைக்கானலில் ஆபத்தான மின்கம்பங்களை மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 27th October 2022 06:16 AM | Last Updated : 27th October 2022 06:16 AM | அ+அ அ- |

கொடைக்கானல், அக். 26: கொடைக்கானலில் ஆபத்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சேதமடைந்தன. சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, வெள்ளிநீா் வீழ்ச்சி செல்லும் சாலை, இருதையபுரம், நாயுடுபுரம், பாம்பாா்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிநீா் வீழ்ச்சி செல்லும் சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து அங்கிருந்த மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த 4 நாள்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதி விபாபாரிகளும், பொது மக்களும் அவதியடைந்தனா்.
மேலும் பல இடங்களில் மின்கம்பங்களில் முள்செடிகள் விழுந்து அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி மின்விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே மின்வாரியத்தினா் மலைப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மின்வயா்களில் படந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின்வயா்களை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரியத்தைச் சோ்ந்த அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்ய இயலவில்லை. தற்போது மழை இல்லாததால் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளது என்றாா் அவா்.