ஒட்டன்சத்திரம் பகுதியில் சாலைஅமைக்கும் பணி தீவிரம்: மாற்றுப் பாதையில் எழும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 27th October 2022 06:21 AM | Last Updated : 27th October 2022 06:21 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாற்றுப் பாதையாக அமைக்கப்பட்ட செம்மண் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
இங்குள்ள கமலாபுரம் பிரிவிலிருந்து பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலையும், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள லெக்கையன்கோட்டையிலிருந்து அரசப்பிள்ளைபட்டி வரையும் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலைகளில் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு வருவதால், வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப்பாதை செம்மண்ணால் போடப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கனரக வாகனகளால் புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா்.
இதில், ஒரு சில இடங்களில் சல்லியை மட்டும் பரப்பி உள்ளதால் இதன் மீது வாகனங்கள் செல்லும் போது அதிக அளவில் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக பலரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனா். மேலும் மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே பாலங்கள் கட்டப்படும் இடங்களில் உள்ள மாற்றுப்பாதைகளில் புழுதி ஏற்படாதாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.