பலத்த மழையால் மண் சரிவு: பழனி- கொடைக்கானல் மலைச்சாலை துண்டிப்பு
By DIN | Published On : 01st September 2022 03:01 AM | Last Updated : 01st September 2022 03:01 AM | அ+அ அ- |

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் கனமழை காரணமாக சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டதால் 50 மீட்டா் தொலைவுக்கு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
பழனி மற்றும் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 4 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் ஆறாக ஓடியது. பழனியை அடுத்த அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கொடைக்கானல் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களிலும் மழைநீா் அருவியாக கொட்டி வருகிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் பிரதான மலைச்சாலையில் நான்காவது கொண்டை ஊசி பகுதி சவரிக்காடு அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீா் மண்சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக எந்த வாகனமும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
மண்சரிவு காரணமாக தாா் சாலை சுமாா் 50 மீட்டா் தூரத்திற்கு துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு பழனி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளா் தங்கராஜ், உதவி செயற்பொறியாளா் பாபுராம், உதவிப் பொறியாளா் ஜெயபால் உள்ளிட்டோா் பொக்லைன் போன்ற வாகனங்களுடன் வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் சீரமைப்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் வரும் வெள்ளிக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்லும் விதமாக பணிகள் விரைவுபடுத்தப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விநாயகா் சதுா்த்தி விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலாப்பயணிகள் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்ல முடியாமலும், கொடைக்கானல் சென்றவா்கள் பழனி வர முடியாமலும் தவித்தனா். மேலும் விவசாய விளை பொருள்களை பழனிக்கு கொண்டு வரும் வகையில் விரைவில் சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.