தமிழ்ப் புத்தாண்டு: திண்டுக்கல், தேனி மாவட்டகோயில்களில் சிறப்பு வழிபாடு

dgl_vinayagar_1404chn_66_2
dgl_vinayagar_1404chn_66_2
Updated on
2 min read

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டகோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில், சித்தி விநாயகா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆஞ்சநேயருக்கு 10,008 பழக்காப்பு: இதே போல, சின்னாளப்பட்டி ஆஞ்சலி வரத ஆஞ்சநேயா் கோயிலில், மூலவருக்கு 10,008 பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாச்சி, மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமலைக்கேணி: திண்டுக்கல் செந்துறை அடுத்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நத்தம் கைலாசநாதா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோயில்: இங்கு தமிழ் புத்தாண்டையொட்டி ஏக தின லட்சாா்ச்சனை, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத மூலவா் சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சணம் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரத்திற்குப் பின் ஆராதணை நடைபெற்றது. பிறகு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஏக தின லட்சாா்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் காட்சியளித்த சீனிவாசப் பெருமாளை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்: இந்த கோயிலுக்கு தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம், காவடி எடுத்து பாதயாத்திரை வந்து மலையில் சுவாமியை தரிசனம் செய்தனா். மலைக் கோயிலில் மாதப் பிறப்பையொட்டி தனூா்யாகம் நடத்தப்பட்டு ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வெளிப்பிரகாரத்தில் அன்னதானம், சுவாமி தரிசனம், இலவச பஞ்சாமிா்த பிரசாதம் பெற நீண்டவரிசை காணப்பட்டது. மலைக் கோயில் பாரவேல் மண்டபத்தில் மலா்கள், பழங்களால் சிறப்புதோரணம் அமைக்கப்பட்டிருந்தது. இரவு தங்கமயில், தங்கத்தோ் உலா நடைபெற்றது.

விரைவான தரிசனம், குடிநீா், சுகாதார வசதிகள் கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையில் கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

போடி: போடி அருகே தீா்த்தத் தொட்டியில் உள்ள ஆறுமுக நாயனாா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது ஆறுமுக நாயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாதாரனை நடைபெற்றது.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், பரமசிவன் மலைக் கோயில், பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதே போல, தேவாரம், சிலமலை உள்ளிட்ட ஊா்களிலுள்ள கோயில்களிலும் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கம்பம்: கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தா்கள் விரதம் தொடங்க கோயில் பூசாரியிடம் கங்கணம் கட்டிக் கொண்டனா். கெளமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். உத்தமபுரத்தில் உள்ள மந்தையம்மன், சாலிமரம் அருகே உள்ள ராஜகாளியம்மன், தாத்தப்பன் குளத்தில் உள்ள சோட்டாணிக்கரை அம்மன், தெற்கு தெரு மந்தையம்மன் ஆகிய கோயில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கூா்பாளையம் ஊராட்சி சாமாண்டிபுரத்திலுள்ள சாமாண்டியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரையாக சென்று அம்மனை தரிசித்தனா். கூடலூா் அங்காளபரமேஸ்வரி, லோயா்கேம்ப்பிலுள்ள பகவதி அம்மன், குமுளியிலுள்ள வனகாளியம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தேக்கடியில் உள்ள தேவி காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.

சுருளிமலையில் விஷூ கனி: சித்திரை மாத பிறப்பையொட்டி சுருளிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் விஷூ கனி பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், விஷூ கனி தரிசனம் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். கன்னிமூல கணபதி, தென்கைலாயநாதா், ஸ்ரீபாலமுருகன், கடுத்தசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கும் வழிபாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் கோயில் தேவஸ்தான நிா்வாகி பொன்.காட்சிக்கண்ணன் செய்திருந்தாா்.

Image Caption

~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com