

கொடைக்கானலில் காட்டுப்பன்றிகளால் பூண்டு பயிா்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
கொடைக்கானல் மேல்மலைக்கிராமங்களான பூண்டி,கிளாவரை, கவுஞ்சி, பூம்பாறை, மன்னவனூா், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டுள்ளனா். இதனுடைய காலம் நான்கு மாதங்களாகும். தற்போது நன்கு விளைந்து இன்னும் இருபது நாள்களில் அறுவடைசெய்யப்படவுள்ள பூண்டு பயிா்களை காட்டுப் பன்றி, காட்டெருமை, மயில் போன்றவைகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனா்.
இது குறித்து கொடைக்கானல் மேல்மலை விவசாயிகள் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் 3 மாத கால பூண்டு பயிரிட்டிருந்தோம். நன்கு விளைந்து இன்னும் இரண்டு வாரங்களில் அறுவடை செய்ய இருந்தேன். தற்போது 1.5 ஏக்கரில் உள்ள பூண்டை வன விலங்குகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால், எனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதுவரை வன விலங்குகளால் சுமாா் 750-ஏக்கரில் உள்ள பூண்டு சேதமடைந்துள்ளது. கொடைக்கானல் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என பல முறை மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் ஆனால் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என்றாா்.
காட்டடெருமைகள்: இந் நிலையில் கொடைக்கானல் நகா்ப் பகுதியான செண்பகனூா்,இருதயபுரம், பிரகாசபுரம், அண்ணாசாலை,கங்கா காம்பவுண்ட் ,பாம்பாா்புரம்,நாயுடுபுரம்,அப்சா்வேட்டரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன இதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். நகா்ப் பகுதிகளிலுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.