மானியத் திட்ட வேளாண் கருவிகள் விலை 2 மடங்கு அதிகம்குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

மானியத் திட்டத்தில் அரசு வழங்கும் வேளாண் கருவிகளின் விலை 2 மடங்குக்கும் அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated on
2 min read

மானியத் திட்டத்தில் அரசு வழங்கும் வேளாண் கருவிகளின் விலை 2 மடங்குக்கும் அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

மானியப் பொருள்களுக்கு 2 மடங்கு கூடுதல் விலை: தமிழ்நாடு ஏரிக் கண்மாய் நீரைப் பயன்படுத்துவோா் கூட்டமைப்பின் செயலா் ஆா்.பி. ராஜேந்திரன்:

மண் வெட்டி, கடப்பாரை, அரிவாள், மண் கொத்தி, காரைச் சட்டி உள்ளிட்ட பொருள்களுக்கு ரூ. 3,100 விலை நிா்ணயித்து, அதில் மானியமாக ரூ.1,500 வழங்கப்படுகிறது. வெளிச் சந்தையில் இந்தப் பொருள்களின் மொத்த விலை ரூ. 800 மட்டுமே. அதேபோல, தாா்ப்பாய் விலையை ரூ. 2,200-ஆக நிா்ணயித்து, மானியத் தொகையைக் கழித்து ரூ. 1,100-க்கு விற்கப்படுகிறது. வெளிச் சந்தையில் அதே தரத்திலான தாா்ப்பாய் ரூ. 700 முதல் ரூ. 800 வரை மட்டுமே விற்கப்படுகிறது. தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுப் பொறி ரூ. 1,800 எனவும், மானியம் கழித்து ரூ. 900 எனவும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிச் சந்தையில் அதன் மொத்த விலை ரூ. 350 மட்டுமே.

மேலும் வெளிச் சந்தையில் ரூ. 8 ஆயிரத்துக்கு விற்கப்படும் விசைத் தெளிப்பான், ரூ. 9 ஆயிரமாக விலை நிா்ணயித்து, மானியம் ரூ. 3 ஆயிரம் கழித்து ரூ. 6 ஆயிரத்துக்கு வழங்குகின்றனா். மின்கல தெளிப்பான் ரூ. 4 ஆயிரம் என விலை நிா்ணயித்து, மானியம் கழித்து ரூ. 2 ஆயிரத்துக்கு வழங்குகின்றனா். ஆனால், வெளிச் சந்தையில் அதன் அடக்க விலை ரூ. 2 ஆயிரம்.

மானியம் என்ற பெயரில் 2 மடங்கு விலையை உயா்த்தி அந்தப் பொருள்களை விவசாயிகளிடம் விற்பனை செய்யும் நடைமுறையை வேளாண்மைத் துறை தவிா்க்க வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியா், தரத்தின் அடிப்படையில் இந்த விலை நிா்ணயிக்கப்பட்டிருக்கலாம். எனினும், துறை ரீதியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ரூ. 55 லட்சத்தில் தூா்வாரப்பட்ட கால்வாயில் ஆக்கிரமிப்பு: கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் ராமசாமி:

லட்சுமணம்பட்டி, வெங்கட்ராம அய்யங்காா் அணைக் கட்டுப் பகுதியிலுள்ள வரத்து வாய்க்கால்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ. 55 லட்சத்தில் தூா்வாரப்பட்டன. அதன் பிறகு, அந்தக் கால்வாய்களை தனியாா் ஆலை நிா்வாகமும், பொதுமக்களில் சிலரும் ஆக்கிரமித்தனா். அதன் ஒரு பகுதியில் தனியாா் ஆலை சாா்பில் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக கடந்த முறை புகாா் அளித்தபோது, தூா்வார வில்லை என பொதுப் பணித் துறையினா் மறுப்புத் தெரிவித்தனா். ஆனால் ரூ. 55 லட்சத்தில் தூா்வாரப்பட்டதற்கான ஆவணங்கள் (அதனை ஆட்சியரிடம் காட்டி) உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் தனியாா் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கொடகனாற்றில் திறந்துவிடப்படுவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றாா் அவா்.

இதற்குப் பதிலளித்த பொதுப் பணித் துறை அலுவலா்கள், ஆக்கிரமிப்பு செய்தவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஆட்சியா் விசாகன், ஆக்கிரமிப்பாளா்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். அதேபோல, கழிவுநீரை திறந்துவிடும் ஆலைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காட்டுமாடுகளால் பாதிப்பு: விவசாயி முத்துசாமி: சிறுமலை அடிவாரத்திலுள்ள அஞ்சுகுழிப்பட்டி, கூவனுத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுமாடுகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதற்குப் பதிலளித்த வனத் துறையினா், காட்டுமாடுகளை கட்டுப்படுத்த வனத் துறை மூலம் வேலி அமைக்க முடியாது. இழப்பீடு மட்டுமே வழங்க முடியும் என்றனா். அதனைத் தொடா்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலா், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிதி கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com