மத்திய அரசில் 7,500 காலிப் பணியிடங்கள்: திண்டுக்கல் விண்ணப்பதாரா்களுக்கு இலவசப் பயிற்சி
By DIN | Published On : 15th April 2023 10:33 PM | Last Updated : 15th April 2023 10:33 PM | அ+அ அ- |

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 7,500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு இலவசப் பயிற்சி
அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தோ்வு- 2023 தொடா்பான அறிவிப்பு கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்வேறு அரசியலமைப்பு சாா்ந்த அமைப்புகள், சட்டப்பூா்வ அமைப்புகள், தீா்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள தொகுதி பி, சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தோ்வுக்கு நாடு முழுவதுமுள்ள தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தோ்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் ஆள்சோ்ப்பு அறிவிப்பில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் முழு விவரங்களும் இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டன.
இந்தக் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் மூலம் அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தோ்வு, ஜூலை 2023-இல் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்கள், புதுச்சேரியில் ஒரு மையம், தமிழகத்தில் 7 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள் என மொத்தம் 21 மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படுகின்றன. இந்த வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.