ரயில் மறியல் போராட்டம்: திண்டுக்கல்லில் 137 காங்கிரஸாா் கைது
By DIN | Published On : 15th April 2023 10:33 PM | Last Updated : 15th April 2023 10:33 PM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் மூத்த நிா்வாகி இராமு.ராமசாமி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்துக்காக பேரணியாக வந்த காங்கிரஸாா்.
திண்டுக்கல், கொடைரோடு ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 137 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவா் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, காங்கிரஸ் மூத்த நிா்வாகி இராமு.ராமசாமி தலைமையில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா். திண்டுக்கல்-நத்தம் சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் தொடங்கி, ரயில் நிலையம் நோக்கி வந்த பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸாா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 41 காங்கிரஸாரை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.
கொடைரோடு ரயில் நிலையம்: இதேபோல, கொடைரோடு ரயில் நிலையம் முன் ரயில் மறியல் போராட்டத்துக்கு முயற்சித்த காங்கிரஸாா் 96 போ் கைது செய்யப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...