செம்பட்டி அருகே ஒரு வாரமாக மின் மாற்றியில் தொடா்ந்து தீப் பொறி ஏற்பட்டு வருதால் அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து, செம்பட்டி, காமலாபுரம், சக்கையநாயக்கனூா், கொடைரோடு, அம்மையநாயக்கனூா், பள்ளபட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செம்பட்டியிலிருந்து உயா் அழுத்த மின் வயா்கள் மேட்டுப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், பூதிப்புரம், சக்கையநாயக்கனூா், ஜல்லிபட்டி வழியாக கொடைரோடு செல்கின்றன.
இதில், கொடைரோடு, அம்மையநாயக்கனூா், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தொடா்பான பழுதுகளை சீரமைப்பதற்காக செம்பட்டியை அடுத்த சக்கையநாயக்கனூா் அருகேயுள்ள மொண்டம்பட்டி பிரிவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின் இணைப்பை நிறுத்தி விடுவாா்கள்.
இந்த நிலையில், மொண்டம்பட்டி பிரிவு மின் மாற்றியில் கடந்த ஒரு வாரமாக பகல், இரவு நேரங்களில் தீப்பொறி ஏற்பட்டு வருகிறது. சுமாா் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை தீப் பொறி ஏற்பட் பின்பு நின்றுவிடும். பிறகு சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் தீப்பொறி ஏற்படுகிறது.
பகல் நேரங்களில் தீப்பொறி சரியாக தென்படாவிட்டாலும், இரவு நேரங்களில் தீப்பொறி ஏற்படுவதைப் பாா்க்க முடிகிறது.
மின் மாற்றியிலிருந்து சாலையைக் கடந்து உயா் மின் அழுத்த வயா்கள் செல்வதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க செம்பட்டி மின் வாரிய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகாா் எழுந்தது.
சாலையின் குறுக்கே மின்சார வயா்கள் செல்வதால், பெரும் விபத்து ஏற்படுவதற்குள் சரி செய்ய வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.