கொடைரோடு பேருந்து நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd April 2023 11:19 PM | Last Updated : 23rd April 2023 11:19 PM | அ+அ அ- |

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை அருகே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கொடைரோடு பேருந்து நிலையத்தை நவீன முறையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொடைரோட்டில் திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினந்தோறும் தேனி, போடி, கம்பம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அணைப்பட்டி, விளாம்பட்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள், பயணிகள், அலுவலா்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோா் வந்து சென்றனா்.
தினமும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்த சென்றன. இந்தப் பகுதியில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பூக்கள், பழங்களை வெளியூா்களுக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நான்கு வழிச் சாலையால், வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகள் திண்டுக்கல்- மதுரை அரசு, தனியாா் பேருந்துகள் கொடைரோடு, அம்மையநாயக்கனூா் வழியாக வந்து செல்லாமல் நேராக நான்கு வழிச்சாலையில் சென்றன. இதனால், கொடைரோடு பேருந்து நிலையம் பராமரிப்பின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத நிலையில் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து இந்தப் பகுதி அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் மாதவன் கூறியதாவது:
நான்கு வழிச்சாலை போடப்பட்ட பின்பு, பெரும்பாலான அரசு, தனியாா் பேருந்துகள் கொடைரோடு பேருந்து நிலையத்தைப் புறக்கணித்து, நான்கு வழிச்சாலை வழியாகச் செல்கின்றன. திண்டுக்கல்- மதுரை பேருந்துகளில் கொடைரோடு, அம்மையநாயக்கனூா் பயணிகளை ஏற்ற மறுக்கும் அவலநிலை தான் உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாா் அளித்துள்ளோம். எனவே, மீண்டும் அனைத்து பேருந்துகளும் கொடைரோடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, புகழ்பெற்ற கொடைரோடு பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.