செப். 30-க்குள் சொத்து வரி செலுத்தத் தவறினால் ஒரு சதவீத தனி வட்டி!

வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதைப் போல, வரும் செப். 30- ஆம் தேதிக்குள் செலுத்தத் தவறினால் ஒரு சதவீத தனி வட்டி வசூலிக்கப்படும்.

வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதைப் போல, வரும் செப். 30- ஆம் தேதிக்குள் செலுத்தத் தவறினால் ஒரு சதவீத தனி வட்டி வசூலிக்கப்படும் என்பதையும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த சொத்து உரிமையாளா்கள், தங்களது சொத்து வரியில் முதல் அரையாண்டுக்கான வரியை இந்த மாதத்துக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, சொத்து வரியை உடனடியாகச் செலுத்த வலியுறுத்தி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டும், குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரித்தும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்கின்றன. ஆனாலும், வரி வசூலில் நகராட்சிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பகுதிகளில் இலக்கை எட்ட முடிவதில்லை.

பெரும்பாலான நகராட்சிகள் வரி வசூலிப்பதில் 90 முதல் 100 சதவீத குறீட்டை ஆண்டுதோறும் எட்டி விடுகின்றன. ஆனால், மாநகராட்சிகளைப் பொருத்தவரை, 65 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே வரி வசூல் நடைபெறுவதாகக் கூறப்படுறது. உள்ளாட்சி அமைப்புகளின் வளா்ச்சியில் வரி வசூல் முக்கியப் பங்கு வகிப்பதால், 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் 5 சதவீத ஊக்கத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் விளம்பரப் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன. ஊக்கத் தொகையை மட்டுமே விளம்பரப்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள், அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே ஊக்கத் தொகையாக பெற முடியும் என்பது குறித்தும், வரும் செப். 30-ஆம் தேதிக்குள் வரி செலுத்தத் தவறினால் அடுத்து வரும் ஒவ்வொரு மாதத்துக்கும் தலா ஒரு சதவீத தனி வட்டி வசூலிக்கப்படுவது குறித்தும் தெரிவிப்பதில்லை என புகாா் எழுந்துள்ளது.

அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை: நிதி ஆண்டில் அரையாண்டு தொடங்கிய நாளிலிருந்து 30 நாள்களுக்குள் (அதாவது ஏப். 30-ஆம் தேதிக்குள்) சொத்து வரி செலுத்துவோருக்கு, நிகர சொத்து வரியில் 5 சதவீதம் ரூ. 5 ஆயிரத்துக்கு மிகாமல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அரையாண்டு காலம் முடிந்த பிறகும் சொத்து வரி செலுத்தாமல் இருந்தால், தனி வட்டி முறையில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சதவீத அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

வீட்டுடன் இணைந்த காலி மனைகளுக்கு வரி விதிப்பு: இதுவரை கட்டடத்தின் அருகிலுள்ள காலி மனைகளுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது திருத்தி வெளியிடப்பட்ட தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, கட்டடத்தின் மொத்தப் பரப்பளவைவிட 2 மடங்கு கூடுதலாக இருக்கும் காலி மனைக்கு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல, மேல்முறையீட்டுக் குழு அல்லது நீதிமன்றங்களின் உத்தரவுக்குப் பிறகு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை மாதம் ஒரு சதவீத அபராதத் தொகையுடன் சோ்த்து 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாய் நிகழாண்டில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

நகராட்சிகளைப் பொருத்தவரை, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் நடத்தும் ஆய்வுகளின் பலனாக வரி வசூல் நிதியாண்டின் தொடக்கம் முதலே சீராக நடைபெற்று வருகிறது. வரி வசூல் சதவீதம் குறைந்தால், சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது பணியிட மாறுதல் போன்ற நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மாநகராட்சிகளில் தொடா் கண்காணிப்பு இல்லாததாலும், வரி வசூல் அலுவலா்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, மாநகராட்சிகளிலும் வரி வசூல் சதவீதம் குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, 5 மாத அவகாசத்துக்குப் பிறகு மாதம் ஒரு சதவீத அபராதத் தொகை வசூலிக்கப்படுவது குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com