ஓய்வு பெற்ற ஐஜியிடம் பணம் திருட்டு: திருச்சி சகோதரா்கள் கைது
By DIN | Published On : 02nd August 2023 04:50 AM | Last Updated : 02nd August 2023 04:50 AM | அ+அ அ- |

ஓய்வு பெற்ற காவல் துறை ஐஜியிடம் ரூ. 50 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்ற திருச்சியைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாலக்காடு-சென்னை எம்ஜிஆா் சென்டரல் வரை செல்லும் பழனியாண்டவா் விரைவு ரயிலில் கடந்த மாதம் 6-ஆம் தேதி கணேசமூா்த்தி என்பவா் பயணித்தாா். காவல் துறையில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பெட்டியில் பயணித்தாா். அப்போது, இவரிடம், ரூ. 50 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதன் பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி, உதவி ஆய்வாளா் பாஸ்கரன், தனிப் பிரிவுக் காவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய தனிப் படை அமைத்து, கைப்பேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், திருச்சி ராம்ஜிநகரைச் சோ்ந்த குமரன் மகன்கள் ஸ்ரீமன் நாராயணன் (23), சரத்குமாா் (26) ஆகிய இருவரும் கணேசமூா்த்தியிடம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விசாரணைக்குப் பிறகு, இருவரும் திண்டுக்கல் 2-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவா் தலைமறைவாக உள்ளாா்.