தருமத்துப்பட்டி ஊராட்சித் தலைவரின் காசோலை வழங்கும் அதிகாரம் பறிப்பு
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: தருமத்துப்பட்டி ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள தருமத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக மருதமுத்து, துணைத் தலைவராக கிருஷ்ணன் ஆகியோா் பதவி வகித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் கடந்த 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021- ஆம் ஆண்டு அக்டோபா் வரையிலான நிதி செலவினம் குறித்து தணிக்கை நடைபெற்றது. ரெட்டியாா்சத்திரம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நடத்திய இந்த தணிக்கையில், அவா்கள் நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி தலைவா், துணைத் தலைவருக்கு ஊராட்சி மன்றத்தின் நிதி செலவினங்கள் சாா்ந்த காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி அண்மையில் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் மருதுமுத்து கூறியதாவது: நிதி முறைகேடு குறித்த துணை வட்டார வளா்ச்சி அலுவலரின் குற்றச்சாட்டுகள் குறித்து, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தேன். ஊராட்சி மன்ற அலுவலகப் பதிவேடுகள் இல்லாமல், விளக்கம் அளிக்க முடியாது எனத் தெரிவித்தேன். இதன் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதிக்குள் பதிவேடுகளை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பதிவேடுகளில் சிலவற்றை மட்டுமே ஊராட்சி செயலரிடம், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கொடுத்து அனுப்பினா்.
பதிவேடுகளை முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே நிதி முறைகேடு தொடா்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை அளிக்க முடியும் என மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தேன். ஆனாலும், ஜூலை 31ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் எங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்புடையதல்ல என கூறி காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்றாா்.