கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலாத் தலங்கள் மூடல்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட வனப் பகுதி.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதியில்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.
கடந்த புதன்கிழமை கொடைக்கானல் வனப் பகுதி (‘பைன் பாரஸ்ட்’) சுற்றுலாத் தலத்தில் இரு வாகனங்கள் மோதிக் கொண்டதில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பையா (40) உயிரிழந்தாா். மேலும், 20 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.
இந்த வனப் பகுதி சுற்றுலாத் தலத்தில் வாகனங்ளை நிறுத்த வசதி இல்லாததால் விபத்து ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவித்தனா். வனப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வனத் துறையினா் உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, வனப் பகுதி சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, ‘பைன் பாரஸ்ட்‘, குணா குகை, மோயா் பாயிண்ட், வட்டக்கானல் அருவி, பேரிஜம் ஆகியவை மூடப்பட்டன. இதனால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.
இதுகுறித்து மாவட்ட வனத் துறை அலுவலா் யோகேஷ் குமாா் மீனா கூறியதாவது:
கொடைக்கானல் வனப் பகுதிகளில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...