லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளா் கைது
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரத்தில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த் துறை ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (60). இவா் வாரிசுச் சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்தாா். கிராம நிா்வாக அலுவலா் அனுமதி அளித்த நிலையில், வருவாய்த் துறை ஆய்வாளா் அனுமதிக்காக, ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பாண்டியனை (44) வேலுச்சாமியின் மகன் மாரிமுத்து தொடா்பு கொண்டாா். அப்போது, வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி அளிப்பதாக பாண்டியன் கூறினாராம்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையில் மாரிமுத்து புகாா் செய்தாா். இதையடுத்து, ராசயனப் பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை மாரிமுத்துவிடம் கொடுத்தனா். அந்த பணத்தை புதன்கிழமை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் ஆய்வாளா் பாண்டியனிடம், மாரிமுத்து கொடுத்த போது அவரை ஊழல் தடுப்பு பிரிவுகாவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா்கள் பழனிச்சாமி, கீதாரூபாராணி ஆகியோா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...