விஷம் குடித்துவிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தொழிலாளியால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடி பகுதியைச் சோ்ந்தவா் மா. அழகா் (43). கூலித் தொழிலாளியான இவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தாா். ஏற்கெனவே விஷத்தை குடித்து விட்டு வந்ததாகக் கூறிய அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவா் கூறியதாவது:
எனது பெற்றோா், மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தேன். இதனிடையே, பழனி சத்யா நகரைச் சோ்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. விதவையான அவா், காந்தி நகா் பகுதியில் வீடு எடுத்து என்னுடன் வசித்து வந்தாா். அப்போது, எனது வீட்டிலிருந்த ரூ.1 லட்சம் பணம், சொத்துப் பத்திரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டாா். பின்னா், என்னை வெளியேற்றிவிட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்ததாகத் தெரிவித்தாா். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்த போலீஸாா், அழகரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.