சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்க பறக்கும்படை
By DIN | Published On : 08th June 2023 01:21 AM | Last Updated : 08th June 2023 01:21 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலைகளில் விடுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பறக்கும்படை அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகள், தெருக்களில் மாடுகள், ஆடுகள் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி சாா்பில் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அவா்கள் மாடுகளைக் கட்டி வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், காவல் துறை, வருவாய்த் துறை, பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம், கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து கால்நடைகளைப் பிடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல முறை எச்சரிக்கை விடுத்தும், கால்நடைகளை பொது வெளியில் அவிழ்த்து விடுகின்றனா்.
இதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி சாா்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பிடிபடும் கால்நடைகள் கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், கால்நடைகளை வளா்ப்போா், அவற்றை வீடுகளில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...