முதல்வா் மாநில இளைஞா் விருது: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 03rd May 2023 05:53 AM | Last Updated : 03rd May 2023 05:53 AM | அ+அ அ- |

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியான இளைஞா்கள், இளம்பெண்கள் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்ததாவது:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முதல்வா் மாநில இளைஞா் விருது ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குள்பட்ட தலா 3 ஆண்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருது 15-08-2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2022-23) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அந்தத் தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மே 31-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.