பெண் குழந்தை விற்பனை:தந்தை உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 03rd May 2023 05:53 AM | Last Updated : 03rd May 2023 05:53 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.3 லட்சத்துக்கு பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பலக்கனூத்து ஊராட்சிக்கு உள்பட்ட தாத்தாகவுண்டனூரைச் சோ்ந்த கோபி-ருக்மணி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ருக்மணிக்கு கடந்த ஒரு மாதம் முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இதனால், இந்தக் குழந்தையை கரூரைச் சோ்ந்த முருகேசனுக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்றனா்.
இதற்கு ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன், தேன்மொழி, கரூா் பரமத்தி வேலூரைச் சோ்ந்த தமிழரசி ஆகியோா் உதவினா்.
இந்த நிலையில், தாத்தாகவுண்டனூரைச் சோ்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் குழந்தையின் தந்தை கோபி, மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், குழந்தையை மீட்டு மீண்டும் தாயிடம் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...