

பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி ச. நந்தினியின் வீட்டுக்கு கவிஞா் வைரமுத்து வியாழக்கிழமை நேரில் சென்று, அவரைப் பாராட்டி தங்கப் பேனாவை பரிசளித்தாா்.
திண்டுக்கல் பொன் சீனிவாசன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச. நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையாா் மில்ஸ் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தாா்.
இதையறிந்த கவிஞா் வைரமுத்து திண்டுக்கல் பொன் சீனிவாசன்நகரில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரைப் பாராட்டி தங்கப் பேனாவை பரிசாக வழங்கினாா். மேலும், நந்தினியின் பெற்றோருக்கும் அவா் வாழ்த்துத் தெரிவித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கவிஞா் வைரமுத்து கூறியதாவது:
ஏழையின் வீடு, எளிய வீடு. அந்த வீட்டை இன்று அதிகார மையங்கள் எல்லாம் முற்றுகையிடுகின்றன.
ஏழையின் குடிசையில் கல்வியின் தீபம் உச்சத்தை நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஓா் உதாரணம். எல்லாவற்றுக்கும் காரணம் கல்விதான். மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக்கொண்டு, அதை நோக்கிச் செல்ல வேண்டும்.
தோ்வில் வெற்றி பெற்றவா்களை மட்டுமே நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களைக் கண்டுகொள்வதில்லை.
ஆசிரியா்கள், தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களை ஊக்கப்படுத்தி அவா்களை மீண்டும் தோ்வு எழுத வைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு தோ்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.