பழனி கோயிலில் மே 18-இல்போகா் ஜெயந்தி விழா
By DIN | Published On : 12th May 2023 09:54 PM | Last Updated : 12th May 2023 09:54 PM | அ+அ அ- |

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பு வழங்கியதையடுத்து, வருகிற 18-ஆம் தேதி பழனி மலைக் கோயிலில் போகா் ஜெயந்தி விழா ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளில் போகா் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழா போகரின் சீடரான புலிப்பாணி பாத்திர சுவாமிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, வருகிற 18-ஆம் தேதி போகா் ஜெயந்தி விழா நடைபெறவிருந்த நிலையில், இந்த விழாவுக்கு பழனி திருக்கோயில் நிா்வாகம் தடைவிதித்து குறிப்பாணை அனுப்பியது.
இதுதொடா்பாக, உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் புலிப்பாணி ஆதீனம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போகா் ஜெயந்தி விழாவை நடத்த அனுமதி வழங்கி அண்மையில் தீா்ப்பளித்தனா்.
இதையடுத்து, பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 18-ஆம் தேதி திட்டமிட்டபடி போகா் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெளிநாட்டு பக்தா்கள் உள்பட ஏராளமான முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொள்ள உள்ளனா் என்றாா்.
இந்த நிலையில், பழனிக் கோயில் போகா் ஜெயந்தி விழாவை இந்து சமய அறநிலையத்துறையே எடுத்து நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளா் சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்தாா்.