

பழனி: பழனியை அடுத்த கோதைமங்களம் அருள்மிகு கோதீஸ்வரா் கோயில் வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி, வன்னிகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 15-ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை விஜயதசமியையொட்டி, சூரனை வதம் செய்ய அம்பு, வில் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக் கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிக் கால பூஜையைத் தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியிடம் பராசக்தி வேல் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, போகா் சந்நிதியிலிருந்து சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அம்பு, வில்லை மூலவரிடம் வைத்து அருள் பெறுதல் நடைபெற்றது.
பின்னா், வேல், அம்பு, வில் ஆகியன அடிவாரம் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி, லட்சுமி நாராயணப் பெருமாள் சமேதராக கோதைமங்களம் புறப்பாடு நடைபெற்றது.
பழனியிலிருந்து கோதைமங்களம் அருள்மிகு கோதீஸ்வரா் கோயிலுக்கு கோயில் யானை கஸ்தூரியுடன் பராசக்தி வேல், சுவாமிகள், பல்லக்கில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சென்ற பின் அங்கு வன்னிகாசூரன் வதம் நடைபெற்றது.
வாழை மரமாக மாறி நின்ற வன்னிகாசூரனை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் துா்காவாக ஆவாகனமாகி அம்பு, வில் கொண்டு நான்கு திசையிலும் வதம் செய்தல் நடைபெற்றது. விழா முடிந்த பிறகு அங்கு குவிந்திருந்த பக்தா்கள் வதம் செய்யப்பட்ட இடத்திலிருந்து மண் எடுத்துச் சென்றனா். வதம் முடிந்து மலைக்கோயில் சென்ற முருகருக்கு வழிநெடுக பூஜைகள் நடைபெற்றன. வேல் மலைக்குச் சென்ற பின்னா், மலைக் கோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெருமாள் கோயில்களில் அா்த்த ஜாம பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, டிஎஸ்பி சரவணன், கண்காணிப்பாளா் அழகா்சாமி, பேஷ்காா் நரசிம்மன், ஜம்பு என்ற சண்முகானந்தம் சுவாமிகள் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.