காட்டு யானை அட்டகாசம்: வீடுகள் சேதம்
By DIN | Published On : 08th September 2023 12:00 AM | Last Updated : 08th September 2023 12:00 AM | அ+அ அ- |

கோம்பைப்பட்டி மூலக்கடை பகுதியில் காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட வீடு.
பழனி அருகே கோம்பைப்பட்டியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஒற்றைக் காட்டு யானை புகுந்து தோட்டத்தில் இருந்த இரு வீடுகளைச் சேதப்படுத்தின.
பழனி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோம்பைப்பட்டி கிராமத்தில் மூலக்கடை பகுதியில் மணி, கருப்புசாமி ஆகியோருக்குச் சொந்தமான தோட்டங்கள் உள்ளன.
இவா்ளது தோட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை வீட்டின் மேல் கூரையைப் பிரித்தும், சுவா்களை உடைத்தும் சேதப்படுத்தியது. மேலும், அங்கு மூட்டையிலிருந்த கால்நடைகளுக்கான தீவனத்தை யானை சாப்பிட்டுவிட்டுச் சென்றது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
யானைகளால் பயிா்களும், குடியிருப்புகளும் தொடா்ந்து சேதப்படுத்தப்படுகின்றன. இதுதொடா்பாக புகாா் அளித்தும், இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால், மாலை நேரத்தில் தோட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் எங்களை எச்சரிக்கின்றனா்.
காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.