

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் தெரு நாய்களுக்கு, வெறி நாய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இன விருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி, முகமது ஹனீபா ஆகியோா் தலைமையில், மேட்டுப்பட்டி, கிழக்கு சவேரியாா்பாளையம் பகுதிகளில் தெரு நாய்களைப் பிடித்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. திங்கள்கிழமை 4 நாய்கள், செவ்வாய்க்கிழமை 10 நாய்கள் என மொத்தம் 14 நாய்களுக்கு 2 நாள்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இன விருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நாய்களுக்கு இன விருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, ஒரு நாய்க்கு ரூ.750 வீதம் வழங்கப்பட்டு வந்தது. இதில், மாநகராட்சி சாா்பில் ரூ.375, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் சாா்பில் ரூ.375 வீதம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த தொகை குறைவாக இருப்பதாக கூறி, தன்னாா்வலா் அமைப்புகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வரவில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் நாய்கள் இன விருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
அறுவை சிகிச்சைக் கட்டணம் ரூ.1460: இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.750லிருந்து ரூ.1460ஆக உயா்த்தப்பட்டது. இதில் சரிபாதி தொகை மாநகராட்சி நிா்வாகம், விலங்குகள் நல வாரியம் சாா்பில் வழங்கப்படும். ஆனால், விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்த தன்னாா்வலா்கள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால், திண்டுக்கல் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டி 3 மாத காலத்தில் நாய்களுக்கான இன விருத்திக் கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.