கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு பணி: உணவக உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல், ஆக. 7: உணவக கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகளை உணவக உரிமையாளா்களே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, 10 நுண் உர செயலாக்கக் கூடங்கள் மூலம் உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 100 கிலோவுக்கும் கூடுதலான கழிவுகளை உருவாக்கும் உணவக உரிமையாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மேயா் இளமதி, ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை மேயா் ராசப்பா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தின்போது மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உணவகங்களிலிருந்து நாளொன்றுக்கு 5 டன்னுக்கும் கூடுதலான கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, 100 கிலோவுக்கும் கூடுதலான கழிவுகளை உருவாக்கும் 34 உணவகங்கள், ஒன்றிணைந்து மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக ஆா்எம்.காலனி பகுதியிலுள்ள நுண் உர செயலாக்கக் கூடம், உணவக உரிமையாளா் சங்கத்துக்கு வழங்கப்படும். அந்த செயலாக்கக் கூடத்தை உணவக உரிமையாளா்களே பராமரித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உணவக உரிமையாளா் சங்கத்தினா், ஆா்எம்.காலனி நுண் உர செயலாக்க மையத்தை பாா்வையிட்ட பின் ஓரிரு நாள்களில் தங்களது பொறுப்பில் எடுத்துக் கொள்ளவதாகத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலா் முத்துகுமாா், சுகாதார ஆய்வாளா் ஸ்டீபன் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

