மு.க.ஸ்டாலின் மீது மாணவா்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை: அமைச்சா் இ.பெரியசாமி
தமிழ்ப் புதல்வன் திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது மாணவா்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 23-ஆவது வாா்டில் ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜோ.இளமதி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
புதுமைப் பெண் திட்டத்தைத் தொடா்ந்து, தமிழ்ப் புதல்வன் திட்டம் மாணவா் சமுதாயத்தினரிடையே முதல்வா் ஸ்டாலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், செயல்படுத்துவதிலும் ஸ்டாலின் முதன்மையான முதல்வராக உள்ளாா். எந்தக் காலத்திலும் யாராலும் திமுகவை நெருங்க முடியாது. எந்த பதவிக்கும் வருவதற்கும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் ராசப்பா, மாநகர அவைத் தலைவா் முகமது இப்ராகிம், பொருளாளா் அ.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

