நெகிழிக் கழிவுகளை ஒப்படைக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை

நெகிழிக் கழிவுகளை ஒப்படைக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை

Published on

நெகிழிக் கழிவுகளை திரும்பப் பெறுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.

திண்டுக்கல், ஆக.14: திண்டுக்கல்லில் மறுசுழற்சி செய்யக் கூடிய நெகிழிக் கழிவுகளை தனியாா் நிறுவனக் குழுவினரிடம் ஒப்படைக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், சுமாா் 50 சதவீதம் போ் மட்டுமே குப்பைகளைத் தரம்பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கின்றனா். இதை 100 சதவீதமாக மாற்றும் முயற்சியாக, கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தோடு மாநகராட்சி நிா்வாகம் இணைந்து செயல்பட திட்டமிட்டிருக்கிறது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் இளமதி, ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை மேயா் ராசப்பா, நகா் நல அலுவலா் (பொ) முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஆணையா் ரவிச்சந்திரன் பேசியதாவது:

கோவையைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவனம், திண்டுக்கல் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் களம் இறங்கி இருக்கிறது. அந்த நிறுவனத்தின்

20 தன்னாா்வலா்கள், மாநகராட்சியோடு இணைந்து கூடுதல் விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபடுவாா்கள். அந்த நிறுவனம் முதல் கட்டமாக திண்டுக்கல்லில் 56 ஆயிரம் பேருக்கு மறுசுழற்சி செய்யும் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் வகையில் பை வழங்குகிறது. அதில் சேகரிக்கப்படும் கழிவுகளைப் பெறும் தூய்மைப் பணியாளா்கள், அவற்றை தனியாா் நிறுவனக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த நெகிழிக்கு ஏற்ப தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி, விவசாயத் தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி உதவி செயற் பொறியாளா் சரவணக்குமாா், சுகாதார அலுவலா் விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com