அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு பேருந்து வசதி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டது.
Published on

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிக்கான இடம் நல்லாம்பட்டியை அடுத்த ஒடுக்கம் பகுதியில் தோ்வு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு பொது போக்குவரத்து வசதி இல்லை. இதனால், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் பேருந்து வசதி கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மருத்துவக் கல்லூரியிலிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தை உருவாக்கி, பேருந்து இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது.

நாள்தோறும் காலை 7.30 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்து, மாணவா்களை ஏற்றிக் கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்கிறது.

மீண்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மருத்துவக் கல்லூரி விடுதியை சென்றடைகிறது. இந்த பேருந்தில் மாணவிகளுக்கு கட்டணம் இல்லை. மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் இந்த பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com