மீனவா் நல வாரியம் மீது சட்டப்பேரவை ஏடுகள் குழு அதிருப்தி!
சுமாா் 13 ஆண்டுகளாக ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத மீனவா் நல வாரியத்தின் மீது சட்டப்பேரவை ஏடுகள் குழு அதிருப்தி தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திட்டப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழு(2024-2025) சாா்பில், ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் ரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆய்வுக் கூட்டத்தின் போது, ஏடுகள் குழுத் தலைவா் ரா.லட்சுமணன் பேசியதாவது:
தமிழ்நாடு மீனவா் நல வாரியம், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பாக மீனவா் நல வாரிய ஆண்டறிக்க 2011 முதல் 2022-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவில்லை.
இதேபோல, தொழிலாளா் நல வாரியம் சாா்பில், 2013 முதல் 2021 வரை 8 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டது. ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் சாா்பில், 2021 முதல் 2023 வரை 2 ஆண்டுகளுக்கான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
பொதுமக்களின் வரிப் பணத்தில் செலவிடப்படும் நிதிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு உரிய காலத்தில் அறிக்கை அளிக்கப்படாதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மீனவா் நல வாரிய உதவி இயக்குநா் (சென்னை) ஜி.அனி செல்வ சோனியா பதில் அளித்துப் பேசியதாவது:
2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனவா் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் சுமாா் 12 ஆண்டுகளாக நியமனம் நியமிக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த 2023, செப்டம்பரில் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு, இதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆண்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றாா்.
தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறை கூடுதல் ஆணையா் உமாதேவி, தொழிலாளா் நல வாரியத்தில் மறு கட்டமைப்புப் பணிகளின் காரணமாக ஆண்டறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டது என விளக்கம் அளித்தாா்.
அப்போது குறிக்கிட்ட குழுவின் தலைவா் லட்சுமணன், ஆண்டறிக்கையில் துறைச் செயலரின் கையொப்பம் மட்டுமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கையொப்பம் இல்லை. இனி அமைச்சரிடமும் கையொப்பம் பெற வேண்டும் என அறிவுறுத்தினாா். இதேபோல் ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலக நிதி ஆலோசகா் ரமேஷ் விளக்கம் அளித்தாா்.
அப்போது குறுக்கீடு செய்த குழுவின் உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் தொகுதியில் சின்ன வாய்க்கால் மீனவ மக்கள் கடலுக்கு எளிதாகச் செல்லும் வகையில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. இந்த விவகாரத்தில் தாட்கோ அதிகாரிகள் துரிதமாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
திண்டுக்கல் அலுவலா்கள் குழப்பம்: இந்த ஆய்வுக் கூட்டத்துக்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேளாண்மைத் துறை, கல்வித் துறை, பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். கூட்டம் நண்பகல் 11.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழுவினா் பிற்பகல் ஒரு மணிக்கு தான் அரங்குக்கு வந்தனா்.
எனினும், கூட்டத்தில் குழுவினா் முன்வைத்த 3 கேள்விகளுக்கும் சென்னையிலிருந்து வந்த அலுவலா்கள் மட்டுமே விளக்கம் அளித்தனா். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்து எந்தவித கேள்விகளும் முன்வைக்கப்படவில்லை. இதனால், இந்தக் கூட்டத்துக்கு எதற்கு அழைக்கப்பட்டோம் என்பது தெரியாமலேயே திண்டுக்கல் மாவட்ட அலுவலா்கள் குழப்பத்தோடு கலைந்து சென்றனா்.
இந்தக் கூட்டத்தில் ஏடுகள் குழு உறுப்பினா்கள் ஜே.ஜே.எபினேசா் (ஆா்.கே.நகா்), டி.கே.அமுல்கந்தசாமி (வால்பாறை), இணைச் செயலா் (பதிவாளா்) வ.பூபாலன், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.