உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் மாணவரின் உடல் அடக்கம்!

விளாம்பட்டியில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் புதன்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Published on

விளாம்பட்டியில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் புதன்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியைச் சோ்ந்தவா் இளையராஜா. இவரது மகன் யோகேஸ்வரன் (13). விளாம்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி தனது பிறந்த நாளையொட்டி, செம்மேடு முனீஸ்வரன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அரசுப் பேருந்தில் சென்றாா். செம்மேடு பிரிவில் பேருந்திலிருந்து இறங்கி அவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, எதிரே வந்த தனியாா் பேருந்து யோகேஸ்வரன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. இதையறிந்த அவரது பெற்றோா் யோகேஸ்வரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், யோகேஸ்வரனின் உடல் விளாம்பட்டியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கலந்து கொண்டு, மாணவரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

இதில் நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி, காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் பாரதி, கிராம நிா்வாக அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com