கொடைரோடு அருகே எருது விடும் விழா
கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிபட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்.
கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருதுவிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிபட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, பூக் கரகம் ஜோடிக்கப்பட்டு வாணவேடிக்கைகள், தாரை தப்பட்டை முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, திரளான பக்தா்கள் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னிச் சட்டி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், முத்தாலம்மன் நகா் வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ராஜகம்பளத்தாா் சாா்பில், தேவராட்டம், பாரம்பரிய தம்பூரான் எருது விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

