விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் -அமைச்சா் இ. பெரியசாமி

விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் -அமைச்சா் இ. பெரியசாமி

Published on

விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட என். பஞ்சம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மக்களுடன் முதல்வா் திட்டத்தை தொடங்கி வைத்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் பயனடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இதில் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை நிறைவேற்றும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை செயல்படுத்தியுள்ளாா்.

இதே போல கலைஞரின் மகளிா் உரிமைத் திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனா். இதில் தகுதியுள்ளவா்கள் விடுபட்டிருந்தால் அவா்களின் மனுக்களையும் பரிசீலித்து உரிமைத் தொகை வழங்கப்படும்.

மேலும், ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து தண்ணீா் கொண்டுவர புதிய திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு எந்தவித சமரசமுமின்றி செயல்படுகிறது. இந்த திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.25.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 50 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்க கணினிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மு. மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் முருகேசன், ராமன், என். பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பாப்பாத்தி நாகராஜன், ஆத்தூா் வட்டாட்சியா் வடிவேல்முருகன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com