கூனக்காளியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்
பழனி, ஜூன் 26: பழனி கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
பழனி கடைவீதி பின்புறம் கச்சேரி புதுத் தெருவில் ஆனிமாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை சக்திகரகம் எடுத்து வருதலுடன் தொடங்கியது. மாலையில் சரவணப் பொய்கையில் சக்திகரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு ாதீபாராதனை ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை காலை சண்முகநதிக்கு தீா்த்தம் எடுத்து வருதலும், மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஊா்வலமாக வந்தனா். பின்னா், நள்ளிரவு 12 மணியளவில் சக்திகரகம் சண்முகநதியில் விடப்பட்டது.
வியாழக்கிழமை (ஜூன் 27) மறுபூஜை நடைபெறுகிறது. வருகிற 30-ஆம் தேதி பொங்கல் வைத்து கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சந்தனகாப்பு அலங்காரமும், செய்யப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் பிஎஸ்கேஎல் ராஜா, நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

