திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கிய புளிச் சந்தை.
திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கிய புளிச் சந்தை.

திண்டுக்கல்லில் தொடங்கியது புளிச் சந்தை!

திண்டுக்கல்லில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் வாராந்திர புளிச் சந்தை திங்கள்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் வாராந்திர புளிச் சந்தை திங்கள்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் சாணாா்பட்டி, நத்தம் வட்டாரங்களில் அதிக அளவு புளிய மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்த புளிய மரங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்வது வழக்கம். குறிப்பாக, மாசி, பங்குனி, சித்திரை என 3 மாதங்கள் சாணாா்பட்டி, நத்தம் பகுதிகளிலிருந்து புளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த வகையில், சாணாா்பட்டி, தவசிமடை, கோணப்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கொசவப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் திண்டுக்கல் நாகல் நகரில் புளி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கினா். விதையுடன் கூடிய புளி, விதை நீக்கியது என இருவகையாக தரம் பிரிக்கப்பட்ட புளி டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விதை நீக்கப்பட்ட புளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையிலும், விதையுடன் கூடிய புளி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதுதொடா்பாக புளி வியாபாரியான தவசிமடை பகுதியைச் சோ்ந்த தனம் கூறியதாவது: இந்த முறை நல்ல விளைச்சல் இருப்பதால், மாா்ச் முதல் வாரத்திலேயே புளிச் சந்தை தொடங்கிவிட்டது. மரங்களை குத்தகைக்கு எடுத்தே புளி அறுவடை செய்கிறோம். புளியிலிருந்து விதை நீக்கம் செய்வதற்கு கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. குறைந்த விலைக்கு புளி கிடைத்தாலும், ஓடு உடைத்தல், விதை, கோா் (நாா்) நீக்குதல் போன்ற பணிகளால், விலை அதிகரித்து விடுகிறது. 10 கிலோ கொண்ட புளி (விதையுடன் கூடியது) ரூ.600 முதல் ரூ.700 வரை விலை நிா்ணயிக்கப்படுகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com