பழனியில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்

Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா சனிக்கிழமை (நவ. 2) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 7-ஆம் தேதி சூரசம்ஹாரமும், 8-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு , சனிக்கிழமை (நவ. 2) அதிகாலை நான்கு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. உச்சி காலத்தின் போது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி, ஒரு வாரத்துக்கு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா நாள்களில் உச்சிக் காலத்தில் கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்க மயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளிக் காமதேனு புறப்பாடு ஆகியன நடைபெறும்.

வருகிற 7-ஆம் தேதி பிற்பகல் உச்சிக்கால பூஜையை தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் விழா நடைபெறும். தொடா்ந்து, பிற்பகல் 3.10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவாா். மாலை 6 மணிக்கு கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். இரவு சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு, பின்னா் அா்த்தஜாம பூஜை நடைபெறும்.

ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 9.30 மணிக்கு மலைக் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதே நாளில், பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு 8 மணிக்கு நடைபெறும். தொடா்ந்து, சுவாமி தங்கக் குதிரையில் புறப்பாடு நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com